பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து ஆக. 3-ல் தில்லியில் மாநாடு :
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 100 சதவிகிதம் அன்னிய நேரடி 
முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து வரும் ஆக. 3-ம் தேதி 
தில்லியில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளதாக தேசிய 
தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலர் சி.கே. மதிவாணன் 
தெரிவித்தார். மாநாட்டில் போராட்ட அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் 
குறிப்பிட்டார்.
  திருச்சியில் வியாழக்கிழமை அவர் அளித்த 
பேட்டி:
  எதிர்வரும் ஆக. 5-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 
தொடங்கவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அன்னிய நேரடி 
முதலீட்டை 100 சதவிகிதம் அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
ஏற்கெனவே எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த நிறுவனத்தில் 74 சதவிகிதம் அன்னிய 
முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
  நாங்கள் அன்னிய முதலீட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியா 
உள்ளிட்ட பல நாடுகள், வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்துள்ளன. ஆனால், நமது 
சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு இதுபோன்ற முதலீடுகள் அனுமதிக்கப்பட வேண்டும். சீனாவில் 
அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படிச் செய்வதில்லை. இது 
ஆபத்தானது.
தொலைத்தொடர்புத் துறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வகிக்கும் 
கேந்திரமான பாத்திரம் நீர்த்துப் போய்விடும். தனியார் நிறுவனங்களின் கொள்ளை 
பிஎஸ்என்எல் செல்போன் வருகைக்குப் பிறகுதான் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதை 
மறந்துவிடக் கூடாது.
   இப்போதும், கிராமப்புறங்களிலும், நாட்டின் எல்லைகளிலும், 
மலைப்பகுதிகளிலும்,  கடலோரங்களிலும், நக்சலைட்டுகள் சிக்கல் இருக்கும் பகுதிகளிலும் 
பிஎஸ்என்எல்தான் சேவை வழங்குகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
   சேவைக் குறைபாடு குறித்து பல்வேறு கேள்விகள் பிஎஸ்என்எல் 
முன் வைக்கப்படுகிறது. கேபிள் வழங்க மறுக்கிறார்கள். செல்போன் கோபுரம் அமைக்க 
ஓராண்டு ஆகிறது. ஆயிரம் இணைப்புகளுக்கு 114 ஊழியர்கள் இருந்த காலம் மாறி, இப்போது 
1000 இணைப்புகளுக்கு வெறும் 6 ஊழியர்கள்தான் இருக்கிறார்கள். நெருக்கடியில்தான் 
இருக்கிறோம்.
 எனவே, எதிர்வரும் ஆக. 3-ம் தேதி தில்லியில் பிஎஸ்என்எல் 
நிறுவனத்திலுள்ள அனைத்துத் தொழிலாளர் சங்கங்கள், அதிகாரிகள் சங்கங்களை 
ஒருங்கிணைத்து மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் போராட்ட அறிவிப்புகள் 
வெளியாகும் என்றார் மதிவாணன்.
  பேட்டியின்போது, சம்மேளனச் செயலர் ஜி. ஜெயராமன், மாவட்டச் 
செயலர் எஸ். பழனியப்பன், அதிகாரிகள்சங்க மாநிலத் துணைச் செயலர் செ. காமராசு ஆகியோர் 
உடனிருந்தனர்.
                         From Trichy Web 
site
 
No comments:
Post a Comment