கோவை: பண ஆசையால் வாழ்வைத் தொலைத்த வழக்கறிஞர் தம்பதி!
சாந்தமான முகத்துடன் வலம்வந்து, பார்ப்பவர்களிடம் அன்பு பாராட்டி,
குறிச்சிப் பகுதி ஏழை, எளிய மக்களின் சட்டக் காவலனாக தோற்றம் அளித்தவர்
தற்போது இரு கொலை வழக்குகளில் சிக்கி வாழ்வைத் தொலைத்துள்ள வழக்கறிஞர்
ராஜவேல் மீதான குற்றத்தை அவருடன் பழகியவர்களும், சுற்றி இருந்தவர்களும்
நம்ப முடியாமல் திகைக்கின்றனர்.
கருப்பு அங்கிக்குள் நுழைந்து, சட்டப் புத்தகத்தை அரணாக்கி கொடூரமாக
அறியப்பட்ட இரு வழக்குகளில் சிக்கியுள்ள வழக்கறிஞர் ராஜவேலு குறித்து
எதுவும் சொல்ல முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் வழக்கறிஞர்கள்.
வழக்கறிஞர் தம்பதியின் பண ஆசை, வாழ்வை திசை மாற்றி விட்டதாக வழக்கறிஞர்கள்
மத்தியில் பேசப்படும் பேச்சுகளை, கோவையில் தினமும் நன்றாகவே கேட்க
முடிகிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, விபத்துகள் நடைபெற்றதாக போலியாக கணக்கு
காட்டி காப்பீட்டுத் துறையில் இருந்து பணத்தை மோசடி செய்த வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் ராஜவேல்.
சி.பி.ஐ. விசாரணை நடத்திய அந்த வழக்கில், ராஜவேலுக்கும் தொடர்பு
இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால், வழக்கின் மீதான அவரது
தொடர்பை நிரூபிக்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டனர்.
இவ்வாறு, இவர் மீதான சந்தேகம் தொடக்கத்திலிருந்தே இருந்தாலும், வசமாக
சிக்கிக் கொண்டது, மணிவேல், அம்மாசை கொலை வழக்குகளில்தான் என்கின்றனர்
காவல்துறை அதிகாரிகள்.
ராஜவேல் - மோகனா பின்னணி
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல், விவசாயி. இவரது
மகன்தான் ராஜவேல். கோவை சட்டக் கல்லூரியில் 1990-ஆம் ஆண்டு கால கட்டத்தில்
சட்டம் படித்தார்.
அப்போது, அதே கல்லூரியில் படித்தவர்தான் மோகனா. இவரது தந்தை மனோகரன், ஓய்வு
பெற்ற அரசு ஊழியர். இவர், சூலூரைச் சேர்ந்தவர். தாயார், திருநெல்வேலி
மாவட்டத்தைச் சேர்ந்தவர். மோகனாவின் பெற்றோர் காதலித்து திருமணம் செய்து
கொண்டவர்கள்.
கல்லூரி காலத்தில், ராஜவேல் - மோகனா இடையே காதல் உருவாகி இருவரும் திருமணம்
செய்து கொண்டிருக்கின்றனர். மோகனா சட்டம் படித்திருந்தாலும், அவர்
நீதிமன்றம் சென்று வாதாடுவது கிடையாது. ஆனால், ராஜவேல், சிவில், கிரைம்
வழக்குகள் இரண்டிலும் திறமையாக வாதாடி வந்துள்ளார்.
கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்
கோவை சட்டக் கல்லூரியில் படித்த போது, கல்லூரி முதல்வர் மீதே பாலியல்
குற்றச்சாட்டு கூறி அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கு காரண மாக
இருந்துள்ளார் மோகனா.
முதல்வர் அறைக்கு சென்ற போது, அவர் தன்னிடம் பாலியல் ரீதியில்
துன்புறுத்தினார் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வழக்கை விசாரித்த
போது, பொய் எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் மீதான
தண்டனை விலக்கிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கின்றனர் வழக்கை விசாரித்து
வரும் காவல்துறையினர்.
ஒடிசா எம்.எல்.எம். மோசடி
ரைக்ட் மேக்ஸ் என்ற பெயரில் மொத்தம் 6 பேருடன் இணைந்து நிதி நிறுவனம்
ஒன்று பெங்களூர், மும்பை, ஒடிசா ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த
நிறுவனத்தின் தலைவராக இருந்து உள்ளார் மோகனா. அப்போது, தன்னை மத்திய அரசு
ஊழியர் என்றுதான் இவர் தெரிவித்து வந்துள்ளாராம். ஒடிசாவில் மட்டும் சுமார்
500-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.12 கோடி பணம் மோசடி
செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ஒடிசா காவல்துறையினர் மோகனா உள்ளிட்ட 6 பேர் மீது 4
பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த வழக்கில்
சீனிவாசன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் இருந்துதான், மோகனாவை காப்பாற்ற, அம்மாசை என்ற பெண்ணை கொலை
செய்து, இறப்பு சான்றிதழ் தயாரித்து, காவல்துறையிடம் சிக்கிக் கொண்டார்
ராஜவேல் எனத் தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.
பண ஆசையால் அவர்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டதோடு, 5 வயதைக் கூட
தாண்டாத மகனின் வாழ்க்கையையும் கேள்விக்குறி யாக்கிவிட்டதாக தெரிவிக்கிறார்
வழக்கை விசாரிக்கும் காவல் உதவி ஆணையர் கே.ராமசந்திரன்.
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நல்லெண்ணம் இல்லாமல், பண மோகம் பிடித்து
வாழ்க்கையை சீரழிப்போருக்கு இந்த தம்பதியின் செயல்பாடும் ஓர்
எடுத்துக்காட்டு.
No comments:
Post a Comment