2ஜி: ஜேபிசி அறிக்கை நாளை தாக்கல் பிரச்னை எழுப்ப பாஜக, திமுக முடிவு
2ஜி அலைக்கற்றை தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி)
அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, அந்த
அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து பாஜக, திமுக, இடதுசாரிக் கட்சிகளின்
உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தில்லியில் மக்களவைத் தலைவர் மீரா குமார்
தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு பல்வேறு அரசியல்
கட்சிகளின் தலைவர்கள் கூறியது:
சுஷ்மா ஸ்வராஜ் (மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்):
எதிர்க்கட்சிகளின் அதிருப்தியுடன் ஜேபிசி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் வரைவு
அறிக்கை தொடர்பாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள்
பதிவு செய்த அதிருப்தி குறிப்புகளை வசதிக்கு தக்கபடி ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ
வெட்டிச் சுருக்கியுள்ளார்.
மக்களவையில் வியாழக்கிழமை அந்த அறிக்கை தாக்கல்
செய்யப்படும்போது இது பற்றி பிரச்னை எழுப்புவோம்.
டி.ஆர். பாலு (திமுக): அலைக்கற்றை விவகாரத்தில் தொடர்புடைய
முக்கிய நபர் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. அவர் அளித்த
விளக்கக் கடிதத்தை அறிக்கையில் முழுமையாக இடம்பெறச் செய்யாமல் பி.சி.சாக்கோ
தவிர்த்துள்ளார்.
பல உண்மைகளை மூடி மறைக்க சாக்கோ
முயன்றுள்ளார்.
இப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள்
எழுப்புவர்.
குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்): நாடாளுமன்றத்தின்
ஓர் அங்கம் ஜேபிசி. அதன் எந்தவொரு நடவடிக்கையும் விவாதத்துக்கு உள்பட்டது. அந்த
வகையில் ஜேபிசி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், அதன் தலைவர் சாக்கோவின் செயல்பாடு
குறித்து விவாதிப்போம் என்றார்.
முன்னதாக, ஜேபிசி அறிக்கையை இறுதி செய்வதற்காக குழுவின் கடைசி
கூட்டத்தை கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி பி.சி.சாக்கோ கூட்டினார். அந்த அறிக்கைக்கு
ஆட்சேபம் தெரிவித்து பாஜக, திமுக, அதிமுக, இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல்
காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் சாக்கோவுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால்,
தங்கள் கடிதத்தில் இடம்பெற்றிருந்த முக்கியமான ஆட்சேபக் குறிப்புகளை நீக்கிவிட்டு
சாக்கோ அறிக்கை தயாரித்ததாக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் மீரா
குமாருக்கு கடிதம் அனுப்பினர். மேலும், சாக்கோ அளித்த அறிக்கையை அவரிடமே திருப்பி
அளிக்க வேண்டும் என்றும் திமுக, பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந் நிலையில்,
மக்களவைத் தலைவரிடம் அளிக்கப்பட்ட ஜேபிசி அறிக்கை மக்களவை, மாநிலங்களவையில்
முறைப்படி வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment