வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தை அடிமாட்டு விலைக்கு
விற்பது தொடர்பாக வாரியத்தின் அதிகாரியும் மற்றும் உயர் அதிகாரியின் உறவினராக
அறிமுகப்படுத்திக் கொள்பவரும், பள்ளி நிர்வாகி ஒருவருடன் நடத்தும் பேரம் குறித்த
வீடியோ பதிவுகள், 'தி இந்து' நாளிதழுக்கு கிடைத்துள்ளன.
வாரியத்தில் நிலம் மற்றும் கட்டிடங்களை விற்பதில் நடக்கும்
முறைகேடுகள் குறித்து சர்வசாதாரணமாக விவாதிக்கப்படுவதும் அந்த வீடியோ காட்சியில்
இடம்பெற்றுள்ளன.
வீட்டுவசதி வாரியத்தில் புதிய வீடு, ஒதுக்கீடுகள் மூலம் கல்லா
கட்டிவந்தவர்களின் கவனம் தற்போது, வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலங்கள்
மற்றும் கட்டிடங்களை விற்பதில் திரும்பியுள்ளது. இவ்வாறு விற்பனைக்காக உள்ள
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, குறைந்த விலையில் பெற்றுத்தருவதாகக்
கூறி, மாநிலம் முழுவதும் ஒரு கும்பல் களமிறங்கியுள்ளது.
அமைச்சருக்கு வேண்டியவர், வாரியத் தலைவருக்கு வேண்டியவர், உயர்
அதிகாரியின் சொந்தக்காரர் என பல பெயர்களில் அவதாரம் எடுத்துள்ள இந்த கும்பலைச்
சேர்ந்தவர்கள், பல இடங்களைப் பற்றி பேரம் நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள்
வருகின்றன.
பகிரங்கமாக நடந்த பேரம்!
ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில்,
வாடகைக்கு இயங்கிவரும், ஒரு தனியார் பள்ளிக்கு அந்த நிலத்தை சொந்தமாக்க பேரம்
நடந்துள்ளது. ஈரோடு வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவரும், வாரியத்தின் நிர்வாக
இயக்குநரின் உறவினர் என்று சொல்லப்படும் ஒருவரும், பள்ளி நிர்வாகியுடன் பேரம்
நடத்தி இருக்கிறார்கள். இந்த பேரம் குறித்த முழு விவரமும் வீடியோ பதிவாக நமது
கைக்கு கிடைத்திருக்கிறது.
அதிகாரி ஒருவர், தனியார் ஒருவருக்கு நிலத்தை விற்க காட்டும்
அக்கறையும், நடைமுறையில் வீட்டுவசதி வாரியத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும்
அந்த வீடியோ காட்சிகளில் அப்பட்டமாக விவாதிக்கப்படுகிறது.
பேரம் பேசிய வாரிய அதிகாரி வீடியோ விவரங்களுக்குள் செல்வதற்கு
முன்பாக ஒரு சிறு ஃபிளாஷ் பேக்.. ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச்
சொந்தமான இடத்தில், கடந்த, 1997-ம் ஆண்டு முதல், தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு
வருகிறது. இந்த நிலத்தை விற்பனை செய்ய வீட்டுவசதி வாரியம் பள்ளி நிர்வாகத்துக்கே
முன்னுரிமையும் கொடுத்தது.
இதன்படி, சுமார் 24,000 சதுர அடி பரப்பு கொண்ட இந்த நிலத்தை, சதுர
அடி 1,500 ரூபாய்க்கு பள்ளி நிர்வாகத்துக்கு விற்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே
சென்னை வீட்டுவசதி வாரிய அலுவலகத்துக்கு குறிப்பு அனுப்பப்பட்டது. இதற்கி டையே, இதே
இடத்துக்கு சதுர அடி, 3000 ரூபாய் என விலை நிர்ணயித்து, மீண்டும் ஒரு மதிப்பீடு
தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், அந்த இடத்தை உங்களுக்கு சாதகமாகப் பேசி
முடித்துத் தருகிறேன் என்று ஈரோடு வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிசாமி
பள்ளி நிர் வாகியை தன்னிச்சையாக அணுகியதாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை
விவரங்கள்தான் இப்போது வீடியோ ஆவணமாக சிக்கி இருக்கிறது.
வீடியோவில் என்ன?
அந்த இடத்தை பள்ளி நிர்வாகிக்கு பெற்றுத்தர ஒவ்வொரு மட்டத்திலும்
செய்யவேண்டிய, 'பார்மாலிட்டீஸ்' குறித்தும், என்ன காரணத்தால் வாரியத்தால் தாமதம்
ஆகிறது என்பது குறித்தும் வாரிய அதிகாரி விளக்குவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
அத்தோடு, 24,000 சதுர அடி கொண்ட மற்றொரு நிலத்தை வாங்குவதற்கான 'வழிமுறை'களையும்
விளக்குகிறார் அந்த அதிகாரி. அந்த இடத்தை பள்ளி நிர்வாகத்துக்கு வாங்கித்
தருவதாகவும், அந்த இடத்தில் பில்டர் மூலம் கட்டிடம் கட்டி மூன்று கோடி ரூபாய் அதிக
விலை வைத்து விற்கலாம் என்றும், உதவி செயற் பொறியாளர் பழனிசாமி பள்ளி நிர்வாகி
பாலகுமாரிடம் பேரம் பேசுகிறார்.
பேச்சுவார்த்தையின் முடிவில், வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர்
செல்லமுத்துவின் மனைவி வழி உறவினர் என பழனிசாமியால் அறிமுகப்படுத்தப்படும், மற்றொரு
பழனிசாமியும் பேரத்தில் பங்கேற்கிறார். ஊழல் வாக்குமூலம் 30 நிமிடங்களுக்கு மேல்
ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில், சில உரையாடல்களை குறிப்பிட்டாலே, வாரிய
நடைமுறைகள் எப்படி உள்ளன என்பது விளங்கும். வாரியம் குறிப்பிடும் தொகையை செலுத்தி,
நியாயமாக ஒரு ஒதுக்கீடு பெற வேண்டுமானால்கூட, அதற்கான, 'பார்மலிட்டீஸ்' குறித்து
உதவி செயற்பொறியாளர் பழனிசாமி பிட்டுப் பிட்டு வைக்கும் விஷயங்கள் பகீர் ரகம்.
அந்த உரையாடல்களின் முழு விவரமும் நாளைய 'தி இந்து'வில்…