Saturday, 4 January 2014

சே குவேரா - நீ வாழ்கிறாய்

சே குவேரா - நீ வாழ்கிறாய்



 1966 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள். ஒட்டிய கன்னத்துடன், தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், ரத்தம் வடிவ வடிய நின்று கொண்டிருக்கிறார். காலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்கின்றன. ராணுவத்தினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டனர்.

     ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள்.

    
சே அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையும், பள்ளிக் கூடமும்

அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர்.

    


சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் மெல்ல கண் திறக்கிறார்.

யாரது?

தங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக அச்சத்துடன் பதில் கூறுகிறார் ஆசிரியர்.

இது எந்த இடம்?

பள்ளிக் கூடம்.

இத்தனை மோசமாக இருக்கிறதே. இங்கே எப்படி வகுப்புகள் நடத்துகிறீர்கள்? சிரம்மாக இல்லையா?

     அந்த நிமிடம். அந்த நொடி அப்படியே உறைந்து போகிறார் ஆசிரியர். இவரால் இந்தச் சூழ்நிலையில் எப்படி, இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடிகிறது. வார்த்தைகள் இன்றி மலைத்து நிற்கிறார் ஆசிரியர்.

    கவலை வேண்டாம். ஒரு வேளை நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக் கூடம் கட்டித் தருகிறேன்.

     கொண்டு வந்த உணவை, கீழே வைத்துவிட்டு, அழுதபடியே வெளியே ஓடுகிறார் ஆசிரியர்.

     நண்பர்களே, இவர்தான் சே குவேரா. மரணத்தின் வாயிலில் நின்ற போதுகூட, பள்ளிக் கூடம் பற்றிக் கவலைப் பட்டவர்தான் சே.

    

கியூபாவில் பாடிஸ்டா அரசை அகற்றியவுடன், பிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் தோற்றுவித்த முதல் இயக்கம், எழுத்தறிவு இயக்கம்.

தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்
இத்தான் எழுத்தறிவு இயக்கத்தின் தாரக மந்திரம்.

     சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்ததும், மாலையில் நேராக வகுப்பறைகளுக்குப் படையெடுத்தனர். கடற்பாறையை வாசலுக்கு வெளியே வைத்துவிட்டு, எழுதுகோல் ஏந்தி எழுதக் கற்றுக் கொண்டார்கள். மரம் அறுப்பவர்கள் கத்தியை மூலையில் வைத்துவிட்டு, புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டார்கள்.

     பிள்ளைகள் பெற்றோர்களுக்குப் பாடம் நடத்தினார்கள். பற்களைத் தொலைத்த மூதாட்டிகளும் படிக்கத் தொடங்கினார்கள்.

     ஒரே ஆண்டு நண்பர்களே, சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரே ஆண்டில், கியூபாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம் 98.2 ஆக உயர்ந்தது. மாணவர்களிடமாகட்டும், படிக்கச் சென்ற முதியவர்களிடமாகட்டும், கட்டணமாக ஒரு பைசாவைக் கூட அரசாங்கம் வசூலிக்கவில்லை. அனைவருக்கும் இலவசக் கல்வி.

     நண்பர்களே, கியூபாவின் அடித்தளம் பள்ளிக் கூடங்களில் இருக்கிறது. கியூபாவின் இன்றைய முன்னேற்றத்தின் ரகசியம் இதுதான்.

     எனக்கும், உங்களுக்கும் இடையில் நெருங்கிய உறவுண்டு என்று நான் நினைக்கவில்லை. உலகில் நடக்கிற அநீதியைக் கண்டு, நீங்கள் கோபம் கொள்வீர்கள் என்றால், நாம் தோழர்கள்தான் என்று கூறியவர் சே குவேரா. அநீதியைக் காணும் பொழுதெல்லாம் கொதித்து எழுந்தவர்தான் சே குவேரா.

     கியூபாவில் தான் வகித்து வந்த அமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, பொலிவிய மக்களின் சுதந்திரத்திற்காகத் துப்பாக்கி ஏந்திச் சென்றவர்தான் சே குவேரா.

    

கியூபப் புரட்சியுடனான எனது கடமைகளை நிறைவேற்றி விட்டேன் என நான் நம்புகிறேன். உங்களிடம் நான் விடைபெறுகிறேன்.

     எனது நாட்கள் மதிப்பு மிக்கதாக இருந்தது. துன்பம் நிறைந்தது என்றாலும், ஒளி மிகுந்த கரீபியப் போராட்ட நாட்களில் உங்களுடன் நிற்கும்போது, நமது மக்களின் பிரிக்க முடியாத பகுதியாக ஆவதன் கர்வத்தை நான் அறிந்தேன்.

     அந்தக் காலத்தில் உங்களைவிடச் சிறந்த சூத்திரதாரியைக் காண்பது  அபூர்வமாக இருந்தது. எந்த ஒரு விருப்பு, வெறுப்புமின்றி உங்களைப் பின் தொடர்ந்ததிலும், சிந்தனையிலும் பார்வைகளிலும் ஆபத்துகளை முடிவு செய்வதிலும், தத்துவங்களை விளக்குவதிலும் உங்களது வழியுடன் ஒத்துப் போக முடிந்ததிலும் நான் கர்வம் கொள்கிறேன்.

     நிங்கள் எனக்குக் கற்றுத் தந்த அந்த நம்பிக்கை வலிமையுடனும், எனது மக்களின் முழுமையான புரட்சிகர வாழ்வும், எங்கு வேண்டுமானாலும், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பேராடுவது என்கிற தூய்மையான, தர்மத்தை நிறைவேற்றும்போது உண்டாகிற அனுபவங்களுடன், நான் புதிய போர்க் களத்துக்குச் செல்கிறேன் என கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு ஒரு நீண்ட, நெடிய உயர்ச்சி மயமான கடிதம் எழுதி, எழுதுகோலைக் கீழே வைத்துவிட்டு, துப்பாக்கியை ஏந்திச் சென்றவர்தான் சே குவேரா.

     நண்பர்களே, பிடல் காஸ்ட்ரோவுக்கு மட்டுமல்ல, தன் செல்லக் குழந்தைகளுக்கும் ஓர் கடிதம் எழுதினார் சே.


எனது குழந்தைகளுக்கு,

     என்றாவது நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்க நேர்ந்தால் அதன் அர்த்தம், நான் உங்களை விட்டுப் பிரிந்து விட்டேன் என்பதாகும்.

     சரியானது என்று தோன்றுவதைச் செய்யவும், தனது தத்துவத்தில் இருந்து, ஒரு போதும் பின்வாங்காமல், வாழவும் செய்த ஒருவராக இருந்தவர் உங்கள் தந்தை.

     நீங்கள் நல்ல புரட்சியாளர்களாக வளர வேண்டும் என்பதுதான் இந்தத் தந்தையின் விருப்பம்.

     நீங்கள் மனதில் பதிகிற மாதிரிப் படிக்கவும், இயற்கையை நமது சொற்படி நிறுத்துகிற, தொழில் நுட்ப வித்தையில் நிபுணத்துவம் பெறவும் வேண்டும்.

     பள்ளியில் உள்ள நல்ல மாணவர்களில் நீங்களும் ஒருவராக ஆக முயற்சிக்க வேண்டும். நல்ல மாணவர் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்ற சொல்லவேண்டியதில்லை அல்லவா.

     எல்லா விசயங்களிலும் முன் வரிசையில் நிற்க வேண்டும். படிப்பிலும், புரட்சிக்கு ஏற்ற நடவடிக்கைகளில் எல்லாம்.

     மற்றொரு முறையில் சொன்னால், விஷய ஞானத்துடன் வேலை செய்யவும், தாய் நாட்டிடமும், புரட்சியுடனும் ஈர்ப்பு காட்டவும், தோழர்களைப் போல் நடந்து கொள்ளவும் வேண்டும்.

     அதைவிட முக்கியமானது, அநீதியை எங்கு பார்த்தாலும், எதிர்க்க முடிய வேண்டும் என்பதுதான். ஒரு புரட்சியாளனின் மிகவும் வணக்கத்திற்குரிய குணம் அதுதான்.

     குழந்தைகளே, இந்தத் தந்தையைப் போக அனுமதியுங்கள். என்றாவது ஒரு நாள், நாம் பார்க்க முடியுமென்று நம்பலாம்.

    இறுதியாய் தனது மனைவிக்கும் ஒரு கடிதம் எழுதினார்.


பிரியமானவளே,

     உன்னைப் பிரிந்து போவது கடினமாகத்தான் இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற, இந்த மனிதனை நீ நன்கு அறிவாய்.

     தைரியத்தை இழந்துவிடாதே. ஒருவேளை, நான் இறந்து போனால், நம் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்று எண்ணுகிறேன். மக்களின் துன்பங்களைக் கண்டு நம்மைப் போலவே, அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

     காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும், எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்று எண்ணும்போது, என் வேதனை அதிகரிக்கிறது. ஆனால் மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு, போரிடுவதற்குத்தான், நான் சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது, என் வேதனை குறைகிறது.

     உன் நடல் நலத்தைக் கவனமாகப் பார்த்துக் கொள். குழந்தைகளை கவனித்துக் கொள். என் தாய் நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப் படுகிறேன்.

     இந்தப் போராட்டத்தில், நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதித் தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

     நண்பர்களே, நெஞ்சம் நடுங்குகிறதல்லவா? கண்கள் கலங்குகின்றதல்லவா? இப்பொழுது புரிகிறதா சே குவேரா யாரென்று. அவரின் உள்ளம் புரிகிறதல்லவா.

      நாடு, மக்கள், மனைவி, குழந்தைகள் அனைவரையும் துறந்து, துப்பாக்கி ஏந்தி பொலிவியாவில் நுழைந்தவர், இதோ ஒரு அசுத்தமான பள்ளிக் கூட அறையில், கைகள் கட்டப்பட்டுக் கிடக்கிறார்.

    மிகுந்தத் தயக்கத்துடன், சே குவேரா இருந்த அறைக்குள் நுழைகிறார்மேஜர் டெர்ரன். சே குவேராவைக் கொல்வதற்கானப் பணி இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

     டெர்ரன் உள்ளே நுழைவதைப் பார்த்த உடனே சேவுக்குத் தெரிந்து விட்டது. கைகளை ஊன்றியபடி மெதுவாக எழுந்து நிற்க முயன்றார். மிகவும் சிரம்மாக இருந்தது.

கொஞ்சம் பொறு, எழுந்து நின்று கொள்கின்றேன்.

டெர்ரனுக்குத் துணிச்சல் வரவில்லை. தயங்கித் தயங்கி நிற்கிறார்.

நீ எதற்காக வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நான் தயார்.

டெர்ரன் துப்பாக்கியை உயர்த்தினான்.

ஒரு மனிதனைத்தானே கொல்லப் போகிறாய். சுடு

நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறார் சே.

சேவின் கண்களை டெர்ரனால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. தனது முகத்தைத் திருப்பிக் கொள்கிறான். மொத்தம் ஆறு குண்டுகள் வெடித்தன.




    

கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு முப்பது ஆண்டுகள் ஆனது, சே குவேராவின் உடலை, மீண்டும் கியூபாவிற்குக் கொண்டு வருவதற்கு. நீண்ட நெடிய போராட்டம் அது.

     சே புதைக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்த நிலையில், 1996 இல், பொலிவியாவில் சே புதைக்கப்பட்ட வாலேகிராண்டே மீண்டும் தோண்டப் பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரிக்கப் பட்டனர். சே புதைக்கப்பட்ட இடம் பற்றிய தகவல் கிடைத்தது. மண் பரிசோதனைகள் நடத்தப் பெற்றன. ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரக் கணக்கான புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டன. பத்தாயிரம் சதுர மீட்டர் நிலம் தோண்டப் பட்டது.

     இறுதியில் உடற்கூறு நிபுணர்கள், அந்த எலும்புக் கூட்டைத் தனியாகப் பிரித்து எடுத்தார்கள். அந்த எலும்புக் கூடுகளின் மீது படிந்திருந்த புழுதியைத் துடைத்தனர். 1967 அக்டோபரில், கருப்பு பெல்ட் அணிந்திருந்த, ஒரே கொரில்லாத் தலைவர் சே குவேரா மட்டும்தான். இதோ அந்த கருப்பு பெல்ட்.

    


நண்பர்களே, 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் நாள், சே குவேராவின் எலும்புகள், ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, கியூபாவுக்குக் கொண்டு வரப்பட்டன. அந்தப் பெட்டிக்கு வெளியே கியூப நாட்டுக் கொடி.

    

இலட்சக் கணக்கான மக்கள் சூழ்ந்து நிற்க, சே குவேராவின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.



     
பிடல் காஸ்ட்ரோ அப்பொழுது பேசினார். நன்றி சே. உனது வரலாற்றுக்கும், வாழ்க்கைக்கும், உதாரணத்துக்கும் நன்றி. கடுமையாகப் பேராடிய உனது சிந்தனைகளை, நாங்கள் பாதுகாப்போம். அதற்காக நாங்கள் நடத்தும், போராட்டத்தில், எங்களுக்கு உத்வேகமளிக்க நீ வந்ததற்கு நன்றி.

     சே குவேராவின் மகள் அலெய்டிடாவிடம் அப்பொழுது ஒரு நிருபர் கேட்டார்.

நீங்கள் உங்கள் தந்தையைப் போல் இருக்க விரும்புகிறீர்களா?

மகள் பதில் கூறினார்.

நான் மட்டுமல்ல. கியூபாவில் உள்ள ஒவ்வொருவரும்.

    பொலிவியாவில், வாலேகிராண்டாவில், சே குவேராவின் உடல் தோண்டியெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகிலிருந்த, ஒரு தபால், தந்தி அலுவலகத்தின் சுவரில், ஒரு வாக்கியம் எழுதப்பட்டு இருக்கிறது.

அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய், சே.

ஆம் நண்பர்களே, சே குவேரா வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.
நேற்றும், இன்றும், நாளையும்
என்றென்றும்.


    
நன்றி: NFTE காஞ்சிபுரம்

No comments:

Post a Comment