Monday, 24 February 2014

                  தேசிய தொலைத்தொடர்பு  
ஒப்பந்த    தொழிலாளர்கள்    சம்மேளனம் (NFTCL)
  
              எழுச்சிமிகு   NFTCL துவக்க விழா 







 தொலைத் தொடர்புத் துறையில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த  தொழிலாளர் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே..

   இந்த சுரண்டலை எதிர்த்திடவும் அந்த தோழர்களின் துயர் துடைக்கவும்  சமரசமின்றி போராடக் கூடிய ஒர் அமைப்பின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று (23-2-2014)  மாலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்  உள்ள இந்திய தொழிற்சங்கங்களின் தாயாக திகழும் AITUC சங்கத்தின் மாநில மைய அலுவலகத்தில், NFTCL எனும் தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனத்தின் தமிழ் மாநில சங்க துவக்க விழா மிக எழுச்சியோடு நடைபெற்றது.

   வரலாற்று சிறப்புமிக்க இந்த கூட்டத்திற்கு NFTE-BSNL சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் தலைவர் தோழர் M.K. ராமசாமி தலைமை ஏற்றார்.

  300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர் பங்கேற்ற இந்த  மாநாட்டினை துவக்கி வைத்து தோழர் C.K. மதிவாணன் அவர்கள்  எழுச்சி உரை யாற்றினார். 

இந்திய திருநாட்டில் மிகவும் வளமிக்க துறையாக உள்ளது தொலைத் தொடர்புத் துறை. அதனால்தான், உலகில் உள்ள பெரிய  அந்நிய பகாசூர கம்பெனிகள் எல்லாம் இந்திய தொலைத் தொடர்புத் துறை நோக்கி வந்து லாப வேட்டை நடத்துகின்றன.

இந்த துறையில் பணியாற்றும்  ஊழியர்களுக்கு மிக குறைந்த அளவில் கூலி கொடுத்து சுரண்டுவதன் மூலம் லாபத்தை பன்மடங்கு பெருக்கி  கொள்ளையடிக்கலாம் என்ற குறுகிய அவர்களின் படையெடுப்புக்கான காரணம். ஆகவே சுரண்டப்படுகின்ற  அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும் பணியாற்றுகின்ற ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்னையை எடுக்கவும் தீர்க்கவும் ஒரு பரந்துபட்ட அமைப்பு இன்றைய காலத்தின் தேவை. 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இது போன்ற ஜீவா NLC ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், NLCயில் பல்லாண்டுகளாக சுரண்டலுக்கு ஆளாகியுள்ள  ஒப்பந்த ஊழியர்களுக்காக போராடி, சாதனைகள் பல படைப்பதை எடுத்துரைத்தார்.         

அதுபோல,  இன்று NFTCL (National Federation of Telecom Contract Labours), தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சம்மேளனம் உதயமாகிறது. 

இந்த அமைப்பு, தொலைத் தொடர்புத் துறையில்  இந்தியாவெங்கும் பரந்து விரிந்து ஆல் போல் வளர்ந்து, தொலைத் தொடர்புத் துறையில் நடைபெறும் சுரண்டலை ஒழித்துக்கட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்ச்சியோடு துவக்கி வைப்பதாக பலத்த கரகோஷத்தோடு தனது உரையை நிறைவு செய்தார்.  

NFTE-BSNL சம்மேளனச் செயலர் தோழர் கோ.ஜெயராமன் சிறப்புரை ஆற்றினார்.

கடலூரிலும் திருச்சியிலும் ஒப்பந்த தொழிலாளர்கள்  மாவட்டச்  சங்கங்களின் செயலர்களாக சிறப்புடன் செயலாற்றும் தோழர்கள் எஸ்.ஆனந்தன், மில்ட்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

   தன்னெழுச்சியாக ஒப்பந்த தொழிலாளர்கள் பலரும் வழங்கிய நன்கொடை ரூ 5,000 த்தை தாண்டியது. 

தமிழ்நாட்டிற்கான புதிய நிர்வாகிகளாக 25 தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்    : தோழர் M.அப்பாதுரை Ex-MP 

செயல் தலைவர் : தோழர் S.மாலி ஈரோடு

மாநிலச் செயலர் தோழர் S.ஆனந்தன் கடலூர்

மாநில துணைச் செயலர் தோழர் A. நமச்சிவாயம்,                                                                                     சென்னை  

மாநிலப் பொருளர் : தோழர் V.பாபு சென்னை  

  கோவை மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களிடையே பணியாற்றி வரும் தோழர் K.M. குமரேசன் மாநில அமைப்புச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன :

1. NFTCLன் தேசிய செயற் குழுவையும் சிறப்பு  மாநாட்டினையும் சென்னையில் ஜூலை முதல் வாரத்தில் சிறப்புடன் நடத்துவது.      

2. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட அமைப்புகளை ஜூன் இறுதிக்குள் உருவாக்குவது.

3. மாநில அமைப்பில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது

  புதியதாக மாநிலச் செயலராக பொறுப்பேற்ற தோழர் எஸ்.ஆனந்தன், பல மாவட்டங்களிலும் நடந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கான இயக்கங்களையும் சாதனைகளையும் பட்டியலிட்டு வருங்காலத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் நலன் காக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்படும் என்று உறுதி கூறினார்.

  இந்த துவக்க விழாவினை சிறப்பாக  நடக்க முன்முயற்சிகள் மேற் கொண்ட புதிய மாநிலப் பொருளர் தொழர் V.பாபு நன்றியுரை ஆற்ற 
விழா எழுச்சியுடன்  நிறைவுற்றது. 

தனது இளம் வயதிலேயே கடலூர் மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலராக பொறுப்பேற்று சுறுசுறுப்புடனும் திறமையாகவும் போராடியும், லேபர் கமிஷனர் மூலம் பல்வேறு தொழிற் தாவாக்களை எழுப்பி பல நல்ல உத்திரவுகளை பெற்றும் சிறப்புடன் பணியாற்றும் தோழர் ஆனந்தன் மாநிலச் செயலராக பொறுப்பேற்றது சாலச் சிறந்தது ஆகும். அவரது சேவை தமிழகத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த ஊழியர்க்கும் தேவை. அவரது பணி சிறப்புடன் அமைந்து, தோழர்கள் அப்பாதுரை, மாலி ஆகிய மூத்த தோழர்களின் வழிகாட்டுதலோடு  NFTCL சங்கம் இந்தியாவெங்கும் பரவி விரவி தனது வர்க்க கடமையை ஆற்ற கோவை மாவட்டச் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 மது மாவட்டத்தின் தோழர் K.M. குமரேசன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்  !   

தகவல்: NFTE கோவை

No comments:

Post a Comment