Friday 29 November 2013

போலீசாரின் குடும்பத்தினருக்கு சலுகை விலையில் 

                                                    BSNL சிம் கார்டுகள்


                                             

காவல் துறையினர் அனைவருக்கும் இலவச சிம் கார்டுகளும் அவர்களின் குடும்பத்தினருக்கு சலுகை விலையிலான சிம் கார்டுகளும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.3.47 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக காவல் துறையில் 1.20 லட்சம் பேர் உள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் முதல் கண்காணிப்பாளர் வரை உள்ளவர்களுக்கு 2008-ம் ஆண்டில் 12,181 பி.எஸ்.என்.எல். சியூஜி (குளோஸ்டு யூசர் குரூப்) சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மாத கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. இதற்காக ரூ.2.05 கோடி ஒதுக்கப்பட்டது.
தற்போது இந்த சியூஜி சிம் கார்டு திட்டத்தை அரசு விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி சாதாரண முதல் நிலை காவலர் முதல் காவல் துறை இயக்குநர் வரையிலும், காவல் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் இலவச சியூஜி சிம் கார்டுகள் வழங்கப்படவுள்ளன. சியூஜி சிம் கார்டுகள் வைத்திருப்பவர்கள் தங்களுக்குள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம். இதில் நாளொன்றுக்கு 50 இலவச எஸ்.எம்.எஸ்.களும் அனுப்பிக் கொள்ளலாம். காவலர்கள் ஓய்வு பெறும் வரை இந்த சிம் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு காவலரும் தங்கள் குடும்பத்தினரின் தேவைக்காக 7 சியூஜி சிம் கார்டுகளை சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் ஒவ்வொரு சிம் கார்டுக்கும் ஆண்டு கட்டணமாக ரூ.264 மட்டும் செலுத்தினால் போதும். ஏற்கெனவே இலவச சிம் கார்டுகள் வைத்திருப்பவர்களும் இந்த சியூஜி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். போஸ்ட் பெய்ட் சிம் கார்டு வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு சில செலவுகளுக்காக மாதம் ரூ.1,200 அரசு கொடுக்கிறது. அவர்கள் மட்டும் மாத வாடகை தொகையை அரசு கொடுக்கும் தொகையில் இருந்து செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், உளவுப் பிரிவு காவலர்களின் வயர்லெஸ் தொலைபேசி சேவைக்காக 1,819 சிம் கார்டுகள் வழங்கப்படவுள்ளன.

வயர்லெஸ் தொலைபேசி சேவை சிம் கார்டுகள் தலா ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.18.2 லட்சமும், 1.20 லட்சம் காவலர்களுக்கு வழங்கப்படும் சிம் கார்டுகள் தலா ஒன்றுக்கு ரூ.274 வீதம் ரூ.3.28 கோடியும் செலவாகிறது. இவை அனைத்துக்கும் சேர்த்து ரூ.3.47 கோடி தற்போது ஒதுக்கப்படுகிறது" என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment