Tuesday 24 June 2014

இந்தி திணிப்பு முயற்சி கூடாது: இந்திய கம்யூ. தேசிய கவுன்சில் தீர்மானம்

இந்தி திணிப்பு முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், சமூக வலைதளங்களிலும் சுற்றறிக்கைகளிலும் இந்தி மொழியை மட்டும் பயன்படுத்துமாறு அரசு துறைகளை நிர்பந்திக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும், அரசின் இதுபோன்ற நடவடிக்கை, மக்களை வாட்டி வதைக்கும் சமூகப் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் முயற்சி ஆகும் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
தேவையற்ற மொழி மோதல்களை உருவாக்கும் என்பதால், இந்தியை ஒரே ஆட்சி மொழியாகத் திணிக்க முடியாது என்றும், தேசிய அளவில் கருத்தொற்றுமை ஏற்படும் வரையில் இந்தியும் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாகத் தொடரவேண்டும் என்றும் தீர்மானம் மூலம் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டண உயர்வைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டண உயர்வானது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்து, மக்கள் மீது பளுவை சுமத்தும் என்றும் இந்தக் கட்டண உயர்வினை அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment